சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கான பயணக் கட்டணத்தை உயர்த்திய ஏர் இந்தியா

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கான பயணக் கட்டணத்தை உயர்த்திய ஏர் இந்தியா

படம்: செயற்கை நுண்ணறிவு

12 Mar 2026 - 6:33 pm

2 mins read

மும்பை: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ப் பதற்றம் உலகளாவிய எரிசக்திச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக, ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைச் சுற்றி உருவாகியுள்ள மோதல் காரணமாக விமானத்தை இயக்குவதற்கான எரிபொருளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

விலை ஏற்றத்தைச் சரிக்கட்ட விமானக் கட்டண உயர்வை ஏர் இந்தியா அறிவித்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எரிபொருள் கட்டணத்தை அந்நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் வியாழக்கிழமை (மார்ச் 12) முதல் பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்குப் பொருந்தும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

விமான நிறுவனங்களின் மொத்த செலவில் 40 விழுக்காடு எரிபொருளுக்குச் செல்கிறது.

டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் அதிக கலால் வரி மற்றும் எரிபொருள் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி எரிபொருள் செலவுகளை மேலும் உயர்த்துவதால், இந்திய விமான நிறுவனங்கள் அதிக அழுத்தத்தைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதனால், புதிதாக எரிபொருள் கட்டணத்தைக் கொண்டு வருவதாக ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

ஏர் இந்தியா பயணச்சீட்டில் வியாழக்கிழமை (மார்ச் 12) நடப்புக்கு வந்த கட்டண உயர்வு:

உள்நாட்டு பயணக் கட்டணங்களில் ரூ.399 கூடுதலாக வசூலிக்கப்படும்.

மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கிற்கு ஒவ்வொரு பயணச் சீட்டுக்கும் 10 அமெரிக்க டாலர் கூடுதலாகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பயணச்சீட்டுக் கட்டணத்தில் 40 அமெரிக்க டாலர் முதல் 60 டாலர் வரை உயருகிறது.

அதேபோல, ஆப்பிரிக்க நாடுகளுக்கு 60 அமெரிக்க டாலர் முதல் 90 டாலர் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்க நாடுகளுக்கான ஏர் இந்தியா கட்டண உயர்வு மார்ச் 18ஆம் தேதி நடப்புக்கு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
ஏர் இந்தியாவிமானப் பயணம்கட்டணம்