சென்னை: அதிகரித்து வரும் விமான எரிபொருள் விலையைக் காரணம் காட்டி ஏர் இந்தியா நிறுவனம் தனது உள்நாட்டு, வெளிநாட்டு விமானச் சேவைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து வருகிறது.
அதன் காரணமாக சென்னைக்குச் செல்ல வேண்டிய அல்லது அங்கிருந்து புறப்பட வேண்டிய பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
சென்னையை இணைக்கும் அந்தமான், ஹைதராபாத், திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கான உள்நாட்டு விமானச் சேவைகளும் சிங்கப்பூர், துபாய், இலங்கை, ஷார்ஜா, தம்மாம் மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட இடங்களுக்கான வெளிநாட்டு விமானச் சேவைகளும் குறைக்கப்பட்டு வருகின்றன அல்லது ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
விமான எரிபொருள் விலையேற்றம் ஒருபக்கம் இருந்தாலும் விமானங்களை இயக்குவதிலும் சவால்களை எதிர்நோக்கி வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், நிலைமைகள் சரியானதும் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பும் என்றும் விமானச் சேவைகள் அதிகரிக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ஏர் இந்தியா பேச்சாளர் ஒருவர், “அதிகரித்து வரும் எரிபொருள் விலை விமான நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதித்துள்ளது. அதனால், பல வழித்தடங்களில் சேவைகளை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.
மேலும், “பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்று விமானங்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அபராதமின்றி பயணத் தேதிகளை மாற்றிக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. அல்லது முழுப் பயணக்கட்டணமும் பயணிகளுக்குத் திருப்பித் தரப்பட்டு வருகிறது,” என்றார் அவர்.
சென்னையில் இருந்து திருச்சி, கோயம்புத்தூருக்கு தினமும் இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதேபோல் சென்னை - தூத்துக்குடி இடையே தினசரி இயக்கப்பட்டு வந்த 12 விமானப் பயணச் சேவைகள் 8ஆகவும் சென்னை - சேலம் இடையே இயக்கப்பட்டு வந்த 4 விமானச் சேவைகள் 2ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஏர் இந்தியா விமானச் சேவைக்குப் பதில் சில நகரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட்டாலும், அவை அடிக்கடி தாமதம் ஆவதோடு சில நேரங்களில் முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

