மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்தின் முழுமையான சீரமைப்புப் பணிகள் நிறைவடைய பத்தாண்டுகள் வரை ஆகலாம் என்று அதன் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (ஜூலை 27) குழுமத்தின் வருடாந்தர அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்த டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், வான்வெளி மூடல், மத்திய கிழக்கு மோதலால் எரிபொருள் விலை உயர்வு, 2025ல் நேர்ந்த மோசமான விமான விபத்து ஆகியவை ஏர் இந்தியாவைப் பாதித்துள்ளதாகக் கூறினார்.
மேலும், முக்கிய உதிரிபாகங்களின் விநியோகத் தடை, மரபையும் நிறுவனக் கலாசாரத்தையும் மாற்றியமைக்க வேண்டியதற்கான தேவை, தொழில்நுட்ப ஊழியரணியைப் பெருக்குதல் போன்ற சவால்களும் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.
இது, 2022 செப்டம்பரில் அப்போதைய தலைமை நிர்வாகி கேம்பல் வில்சன் அறிமுகப்படுத்திய ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. திரு வில்சன் செப்டம்பர் 30ஆம் தேதி பதவியிலிருந்து விலகவுள்ள நிலையில், புதிய நிர்வாகி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மார்ச் 2026ல் முடிவடைந்த நிதியாண்டில், ஏர் இந்தியா ரூ.222.38 பில்லியன் (S$3 பி.) நிகர இழப்பைச் சந்தித்தது. முந்தைய ஆண்டில் இந்த இழப்பு ரூ.108.59 பில்லியனாக இருந்தது.
இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின் மீண்டுவந்த போதிலும், அதிகச் செலவுகளாலும் கடுமையான போட்டியாலும் லாபம் ஈட்டுவதில் தொடர்ந்து அழுத்தம் நிலவுகிறது.

