ஈரான் வழியாகச் செல்லும் விமானச் சேவைகள் கடுமையான பாதிப்பு

ஈரான் வழியாகச் செல்லும் சில விமானச் சேவைகளை ரத்து செய்தது ஏர் இந்தியா, இண்டிகோ

2 mins read
bf0e9ce9-218e-4810-8101-5528a7653ece
ஈரானில் நீடித்து வரும் தொடர் போராட்டங்கள் அந்நாட்டு வான்வெளியையும் விட்டுவைக்கவில்லை. ஈரானின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் இந்திய விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. - கோப்புப் படம்: பிடிஐ

புதுடெல்லி: ஈரானில் கடந்த இருவாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போராட்டங்கள் அந்நாட்டு வான்வெளியையும் விட்டுவைக்கவில்லை. இதனால் ஈரான் வழியாகச் செல்லும் இந்திய விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்பில் இந்தியாவின் முதன்மை விமானச் சேவை நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளன.

வியாழக்கிழமை (ஜனவரி 15) வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின்படி, ஈரானில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக் காரணமாக அந்த வான் வழியாகச் செல்லும் விமானங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சில வேளைகளில், திட்டமிட்டப்படி மாற்றுப் பாதையில் விமானங்களை இயக்க முடியாமல் போகும்பட்சத்தில் அந்த விமானங்கள் ரத்து செய்யப்படும்; பயண நேரங்கள் மாற்றமடையலாம்; எனவே ஈரான் வழியாக மேற்கொள்ளப்படும் அனைத்துலக விமானப் பயணங்களில் தாமதங்களை சந்திக்கவும் நேரிடலாம் என்றும் அறிக்கைகள் கூறின.

இந்த எச்சரிக்கையைக் கருத்தில்கொண்டு, பயணிகள் தங்கள் பயணக்கால அட்டவணையை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோன்று ஐரோப்பாவுக்கான சில விமானங்கள் காலதாமதத்துடன் இயக்கப்படும் என்றும் விமானச் சேவை நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

ஈரான் வான் பகுதியில் பறக்கக் கூடிய விமானங்கள், இந்தியப் பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு வேற்று பாதையில் செல்கின்றன. அதனால், விமானங்கள் காலதாமதத்துடன் சென்று சேரும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்து இருக்கிறது.

ஈரானில் பொருளியல் நெருக்கடி, நாணய மதிப்புச் சரிவு, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன. அரசாங்கத்தை ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் நடைபெற்று வரும்  தொடர் பேரணிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கலவரத்தில் பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர், ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறையினர் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் உள்ளூர், மற்றும் அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

எனவே, இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு இந்தியர்கள் ஈரான் பயணத்தை இயன்றவரை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்