எஸ்ஐஏ, டாட்டாவிடம் $1.47 பி. உதவி நாடும் ஏர் இந்தியா: புளூம்பர்க்

1 mins read
d6ea0c71-894f-402f-8238-db6ffbb1cdee
மும்பையில் தரையிறங்கிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா விமானம் ஒன்று. - படம்: ராய்ட்டர்ஸ்

பெங்களூரு: ஏர் இந்தியா, அதற்கு உரிமை வகிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), டாட்டா சன்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து குறைந்தது 100 பில்லியன் ரூபாய் (1.47 பில்லியன் வெள்ளி) நிதி ஆதரவை நாடுவதாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவல் தெரிந்தவர்களை மேற்கோள்காட்டி புளூம்பர்க் இச்செய்தியை வியாழக்கிழமை (அக்டோபர் 30) வெளியிட்டது. கடந்த ஜூன் மாதம் 240க்கும் அதிகமானோரை பலிவாங்கிய ஏர் இந்தியா விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து இந்நிலை உருவாகியுள்ளது.

அதனால் இதுவரை இல்லாத அளவில் மோசமான நெருக்கடியை ஏர் இந்தியா எதிர்நோக்கி வருகிறது. மேலும், அந்நிறுவனம் தனது பெயரை மீட்கவும் தங்களின் விமானங்களைப் புதுப்பிக்கவும் எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

தங்களின் முறைகளையும் சேவைகளை முழுமையாக மாற்றியமைக்கவும் தங்கள் நிறுவனத்துக்குள்ளேயே பொறியியல், பழுதுபார்ப்புப் பிரிவுகளை உருவாக்கவும் டாட்டா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிதி ஆதரவை நாடுவதாக புளூம்பர்க் செய்தி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

நிதியுதவி வழங்கப்பட்டால் அது, அந்தந்த நிறவனங்கள் ஏர் இந்தியாவில் எவ்வளவு உரிமை வகிக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று புளூம்பர்க் தெரிவித்தது. வட்டி இல்லாத கடனாகவோ பங்குகளின் மூலமாகவோ நிதியுதவி வழங்கப்படலாம்; அது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்