டாட்டாவிடமும் சிங்கப்பூர் ஏர்லைன்சிடமும் $1.9 பில்லியன் அவசர நிதிக்கு ஏர் இந்தியா கோரிக்கை

டாட்டாவிடமும் சிங்கப்பூர் ஏர்லைன்சிடமும் $1.9 பில்லியன் அவசர நிதிக்கு ஏர் இந்தியா கோரிக்கை

2 mins read
706a7b14-206a-4183-af3e-c9df5d8fe158
ஏர் இந்தியா, தற்போது அதன் விமானங்களைப் புதுப்பிப்பது உள்ளிட்ட பல பில்லியன் டாலர் மதிப்பிலான மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.  - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: கடுமையான நிதி நெருக்கடியையும் அதிகரித்துவரும் நட்டத்தையும் சமாளிக்க ஏர் இந்தியா நிறுவனம் $1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (கிட்டத்தட்ட S$1.9 பில்லியன்) அவசர நிதியைப் பெற முயன்றுவருகிறது.

இந்தத் தொகையை வழங்குமாறு அதன் கூட்டு உரிமையாளர்களான டாடா குழுமத்திடமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமும் அது கோரிக்கை விடுத்துள்ளது.

நம்பத்தகுந்த வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இந்தத் தகவலை வெளியிட்டன.

2022ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்த ஏர் இந்தியாவை டாட்டா நிறுவனம் கைப்பற்றியது. அதன் பிறகு, பங்குதாரர்களிடம் கோரப்பட்ட மிகப்பெரிய நிதியுதவிகளில் இதுவும் ஒன்று.

ஏர் இந்தியா, தற்போது அதன் விமானங்களைப் புதுப்பிப்பது உள்ளிட்ட பல பில்லியன் டாலர் மதிப்பிலான மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. இவ்வேளையில், விமான நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்களை அண்மைக் கோரிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில், ஏர் இந்தியாவும் அதன் மலிவுக் கட்டண நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரசும் இணைந்து $2.33 பில்லியன் டாலர் நட்டத்தைப் பதிவுசெய்துள்ளன. இது முந்திய ஆண்டின் நட்டத்தைவிட ஒரு மடங்கிற்கும் அதிகம். இந்த நட்டம் சிங்கப்பூர் ஏர்லைன்சின் லாபத்தையும் பாதித்துள்ளது.

“ஏர் இந்தியாவுக்கு உடனடியாக நிதி தேவைப்படுகிறது. இருப்பினும் இந்தத் தொகை தவணை முறையில் வழங்கப்படும் எனத் தெரிகிறது. இந்த முதலீடு முழுமையடைய, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது பங்களிப்பை வழங்க வேண்டும்,” என்று தகவலறிந்த வட்டாரமொன்று கூறியது.

நிதியைப் புதிய பங்குகளாகக் கொடுக்குமாறு ஏர் இந்தியா கோருவதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்பிலான பேச்சு தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் கோரிக்கை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத இருவர் தெரிவித்தனர்.

ராய்ட்டர்சின் கேள்விகளுக்கு ஏர் இந்தியா, டாடா சன்ஸ் நிறுவனங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.

ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏறக்குறைய 25 விழுக்காட்டுப் பங்குகளை வைத்துள்ளது. ஏர் இந்தியாவின் உருமாற்றத் திட்டத்திற்கு ஆதரவளிக்க டாட்டா சன்சுடன் அணுக்கமாய்ப் பணியாற்றி வருவதாக அது கூறியது. இருப்பினும், ஏர் இந்தியாவின் நிதி நிலைமை குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்