தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

232 பேருடன் ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் அவசரத் தரையிறக்கம்; மாற்று விமானம் விரைந்தது

2 mins read
cad12889-0dac-45d6-a8b5-5e0fb65ad02d
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகடான் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது.

அங்கு அவ்விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அவ்விமானத்தில் பயணிகள் 216 பேர், ஊழியர்கள் 16 பேர் என மொத்தம் 232 பேர் இருந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் மீண்டும் பயணத்தைத் தொடர்வதற்காக மும்பையிலிருந்து புதன்கிழமைப் பிற்பகலில் மாற்று விமானம் ஒன்று அனுப்பப்பட்டது.

பயணிகளுக்கான உணவையும் தேவையான மற்ற பொருள்களையும் அவ்விமானம் ஏற்றிச் சென்றது.

மகடான் விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டதாகவும் அவர்கள் விமானம் தரையிறங்க முழுமையாக ஒத்துழைத்ததாகவும் மேலும் தரையிறங்கியபின் தேவையான ஆதரவை வழங்கியதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது.

பயணிகள் அனைவரும் தற்காலிகத் தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டதையும் அது உறுதிப்படுத்தியது.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து ஏறக்குறைய 10,000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மகடான் நகரில் ஏர் இந்தியா சார்பில் எவரும் பணியாற்றவில்லை.

அதனால், விளாடிவோஸ்டோக் நகரிலுள்ள இந்தியத் துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சு, மகடான் விமான நிலைய ஊழியர்கள், ரஷ்ய அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு, பயணிகளுக்கான வசதிகளை ஏர் இந்தியா ஏற்பாடு செய்தது.

இதனிடையே, ரஷ்யாவில் ஏர் இந்தியா விமானம் அவசரமாகத் தரையிறங்கியதை அடுத்து, நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

"அவ்விமானத்தில் அமெரிக்கர்கள் எத்தனை பேர் இருந்தனர் என்பதை இப்போதைக்கு உறுதியாகக் கூற இயலாது. அமெரிக்காவிற்குக் கிளம்பிய விமானம் என்பதால் அதில் அமெரிக்கக் குடிமக்களும் இருக்கலாம்," என்று அமெரிக்க உள்துறை அமைச்சின் முதன்மை துணைப் பேச்சாளர் வேதாந்த் பட்டேல் கூறினார்.

குறிப்புச் சொற்கள்