வாரம் 200 விமானச் சேவைகளை நிறுத்துகிறது ஏர் இந்தியா

வாரம் 200 விமானச் சேவைகளை நிறுத்துகிறது ஏர் இந்தியா

2 mins read
சிங்கப்பூருக்கான சேவைகள் உட்பட ஜூன் முதல் பல அனைத்துலக விமானச் சேவைகள் தற்காலிக நிறுத்தம்
133843d0-979d-44a9-b369-1945ae14bb3f
சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையில் வாரத்திற்குக் கிட்டத்தட்ட 200 அனைத்துலகச் சேவைகளை நிறுத்துகிறது.

ஈரான் போரினால் விமான எரிபொருள் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, நிதி ரீதியாக லாபகரமான வழித்தடங்களை மட்டுமே தொடர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதில், சிங்கப்பூர் வழித்தடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை – சிங்கப்பூர், மும்பை – சிங்கப்பூர் இடையிலான அன்றாட விமானச் சேவைகள், டெல்லி- சிங்கப்பூர், டெல்லி - சிகாகோ, டெல்லி - ஷாங்காய், மும்பை - நியூயார்க் போன்ற நீண்ட தூரப் பயணச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே மே மாதத்தில் 90 விமானச் சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தியது.

ஏர் இந்தியா குழுமம் கடந்த நிதியாண்டில் ரூ.22,000 கோடிக்கும் (S$292.4 மில்லியன்) அதிகமான நஷ்டத்தைச் சந்தித்திருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலை உயர்வு, ரூபாயின் மதிப்புச் சரிவு ஆகியவை நிதி நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

செலவினக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஊழியர்களுக்கான ஆண்டுச் சம்பள உயர்வையும் ஏர் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

மேலும், உள்நாடு மற்றும் இரண்டு மணி நேரத்திற்குக் குறைவான அனைத்துலகப் பயணங்களில் உணவைத் தவிர்ப்பவர்களுக்கு விமானக் கட்டணத்தில் 250 ரூபாய் வரை தள்ளுபடி, பிசினஸ் கிளாஸ்’ பயணிகளுக்கு விமான நிலைய ஓய்வறை வசதியைத் தனி விருப்பத் தெரிவாக மாற்றுவது உள்ளிட்ட உத்திகளையும் அந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

எனினும், தற்போதைக்கு ஆட்குறைப்புத் திட்டம் ஏதுமில்லை என்று ஏர் இந்தியா கூறியது.

அதேவேளையில், கடந்த மூன்று ஆண்டுகளில் கொள்கை மீறல், முறைகேடுகளில் ஈடுபட்ட 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்