அகமதாபாத்: இந்தியாவின் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார், தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.
விமானத்தில் விஸ்வாசுடன் பயணம் செய்த அவரது சகோதரர் அஜய் விபத்தில் உயிரிழந்தார். டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட அஜய்யின் உடல் லண்டனில் இருந்து வந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வாஸ் - அஜய்யின் சொந்த ஊரான, தாத்ரா - நகர் ஹவேலி, டாமன் - டையூ யூனியன் பிரதேசத்தில் உள்ள டையூ மாவட்டத்துக்கு அஜய்யின் உடல் கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்கு நடைபெற்றதாக பிடிஐ செய்தி தெரிவித்தது.
புதன்கிழமை காலை (ஜூன் 18) அஜய்யின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் தனது சகோதரரின் உடலை விஸ்வாஸ் சுமந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் என 241 பேர் உயிரிழந்தனர். லண்டனைச் சேர்ந்த விஸ்வாஸ் குமார் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) வீடு திரும்பினார்.