புதுடெல்லி: ஏர் இந்தியா-விஸ்தாரா விமான நிறுவனங்களின் இணைப்பு, இந்திய விமானப் போக்குவரத்துத் துறைக்கு மிக முக்கியத் தருணம் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) தலைமை நிர்வாகி கோ சூன் ஃபோங் கூறியுள்ளார்.
பெரிதாக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா குழுமத்தின் உருமாற்றத்துக்கு எஸ்ஐஏ குழுமம் ஆதரவளிக்கும் என திங்கட்கிழமை (நவம்பர் 18) அவர் உறுதியளித்தார்.
நவம்பர் 11ஆம் தேதி ஏர் [Ϟ]இந்தியா-விஸ்தாரா இணைப்புக்குப் பிறகு முதன்முறையாக கருத்துரைத்துள்ள திரு கோ, ஏர் இந்தியாவுடன் வணிக ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் எஸ்ஐஏ கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறினார்.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் திங்கட்கிழமை நடைபெற்ற சடங்குபூர்வ விழா ஒன்றில், டாடா சன்ஸ் குழுமமும் எஸ்ஐஏவும் இந்த இணைப்பைக் கொண்டாடின. டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், திரு கோ இருவருடன் டாடா, எஸ்ஐஏ, ஏர் இந்தியா, விஸ்தாரா ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
எஸ்ஐஏவும் டாடா சன்ஸ் குழுமமும் வெளியிட்ட கூட்டறிக்கை இதனைத் தெரிவித்தது.
“இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஏர் இந்தியாவை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவர உதவுவதிலும் இந்தியாவில் அனைவரும் பெருமைகொள்ளும் விமானக் குழுமத்தை உருவாக்குவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்,” என்று திரு கோ அறிக்கையில் கூறினார்.
ஏர் இந்தியாவை உலகத் தரம்வாய்ந்த அனைத்துலக விமான நிறுவனமாக உருமாற்றுவதற்கான கடப்பாட்டில் இந்த இணைப்பு முக்கிய மைல்கல் என்று திரு சந்திரசேகரன் சொன்னார்.
“எங்கள் விமானப் போக்குவரத்துப் பயணத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடர்ந்து எங்கள் உத்திபூர்வப் பங்காளியாக இருந்து வருகிறது. ஏர் இந்தியாவுக்கு அதை நாங்கள் வரவேற்கிறோம்,” என்றார் அவர்.
ஏர் இந்தியா-விஸ்தாரா இணைப்புக்குப் பிறகு, ஏர் இந்தியா குழுமம் 55 உள்நாட்டு, 48 வெளிநாட்டு நகர்களை உள்ளடக்கும் 300 விமானங்களை இயக்குகிறது. வாரத்திற்கு இயக்கப்படும் 8,300 விமானச் சேவைகள், 312 பயணப் பாதைகளைப் பயன்படுத்துகின்றன. ஏர் இந்தியா குழுமத்தில் பணியாற்றும் மொத்த ஆள்பலம் 30,000க்கும் அதிகம்.
2022 ஜனவரியில் இந்திய அரசாங்கத்திடமிருந்து ஏர் இந்தியாவை டாடா குழுமம் கையகப்படுத்தியது.