சூரத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் நகரிலிருந்து தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிற்குச் சென்ற ஏர் இந்தியாவின் முதல் விமானத்தில் கையிருப்பிலிருந்த மதுபானம் முழுவதையும் பயணிகள் அருந்தித் தீர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
எக்ஸ் தளத்தில் பரவிவரும் சில பதிவுகள் அவ்வாறு குறிப்பிடுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) இயக்கப்பட்ட அந்த விமானத்தில் பயணிகள் 175 பேரும் விமானச் சிப்பந்திகள் ஆறு பேரும் பயணம் செய்தனர்.
நான்கு மணி நேரப் பயணத்தில் அந்த விமானத்திலிருந்த 15 லிட்டர் அளவிலான மதுபானத்துடன் குஜராத்தின் புகழ்பெற்ற தின்பண்டங்களையும் பயணிகள் தீர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மதுபானத்தின் மொத்த மதிப்பு ரூ.1.8 லட்சம் என்று தகவல்கள் கூறுகின்றன.
குஜராத் மாநிலத்தில் கடுமையான மது ஒழிப்புச் சட்டங்கள் அமலில் இருக்கும் நிலையில், அங்கிருந்து புறப்பட்ட விமானத்தில் நடந்த இச்சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும், மதுபானம் முழுவதும் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்று விமான நிறுவன அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். ஒவ்வொரு பயணிக்கும் 100 மில்லிலிட்டருக்குமேல் மதுபானம் வழங்கப்படுவதில்லை என்று அவர்கள் கூறினர்.
ஏர் இந்தியா உரிமையாளரான டாட்டா குழுமம் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.