புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாடு காரணமாகப் பலர் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்பாக டெல்லியில் வசிப்பவர்கள், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் மருத்துவ உதவி நாடியிருப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தூய்மையற்ற காற்று காரணமாகத் தங்கள் குடும்பத்தினரில் குறைந்தது ஒருவராவது நோய்வாய்ப்பட்டிருப்பதாக லோக்கல்சர்கில்ஸ் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த கிட்டத்தட்ட 81 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பலர் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மூன்று வாரங்களில் இருமல் மருந்து, சுவாசக் கருவிகள் போன்றவற்றை வாங்கியிருப்பதாக ஆய்வில் பங்கெடுத்தோரில் 50 விழுக்காட்டினர் கூறினர்.
ஆய்வின் முடிவுகள் குறித்து இந்திய சுகாதார, குடும்ப நல அமைச்சு உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆய்வில் ஏறத்தாழ 11,000 பேர் பங்கெடுத்தனர்.

