புதுடெல்லி: இந்தியாவை அச்சுறுத்தும் காற்று மாசு, தற்போது தென்னிந்தியாவை நோக்கி நகர்வதாகப் பேராசிரியர் டாக்டர் சலீம் அலி நடத்திய ஆய்வு கூறுகிறது.
இதனால், தென்மாநிலங்களிலும் காற்றின் தரம் குறைந்து வருவதாகவும் அது தெரிவிக்கிறது.
வடஇந்தியாவில் காற்றின் தரம் குறைந்து வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, புதுடெல்லியில் அதன் பாதிப்பு மிகவும் அதிகம்.
இதற்கு நிரந்தரத் தீர்வு இல்லாத போதிலும், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது, பழைய வாகனங்களைத் தடை செய்வது, எரிவாயு மூலம் வாகனங்கள் இயக்குவதை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை வடமாநிலங்களை ஆளும் அரசாங்கம் எடுத்து வருகின்றன.
இதற்கிடையே, வட இந்தியாவிலிருந்து நச்சுக் காற்று நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் பயணித்து தென்மாநிலங்களில் பாதிப்பை உருவாக்கி வருவதாக அண்மைய ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
இது குறித்து சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கேரள கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் சலீம் அலி நடத்திய ஆய்வு குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.
மூவாண்டுகளாக நடத்தப்பட்ட அந்த ஆய்வு குறித்த தகவல்கள் வளிமண்டல வேதியியல், இயற்பியல் இதழில் வெளியிடப்பட்டு உள்ளன.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 1 முதல் 3 கிலோ மீட்டர் உயரத்தில் தூசி துகள்கள் நிலைத்திருப்பது வெப்பநிலையை கிட்டத்தட்ட 2 டிகிரி அதிகரிக்கிறது. காற்றின் மாசுபாடு 60 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன் மூலம் கேரளம், தமிழகப் பகுதிகளில் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடு உருவாகியுள்ளதாகவும் மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.