தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லியில் காற்றுத்தரக் குறியீடு 226 ஆக பதிவு: சுவாசப் பிரச்சினைகளால் மக்கள் அவதி

2 mins read
a551ad21-ffe9-489a-9048-bfea9f35aec9
காற்று மாசுபாடு காரணமாக ஒரே புகைமூட்டமாக காணப்படும் டெல்லி நகரம். - படம்: ஊடகம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. தற்போது இங்கு காற்றின் தரம் 226ஆகப் பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துவரும் இந்தக் காற்று மாசுபாடு காரணமாக தொண்டை அடைப்பு, மூச்சுத்திணறல், கண்களில் எரிச்சல், சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தீபாவளிக்குப் பின்னர் இந்தக் காற்று மாசுபாட்டின் அளவு இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இதனால் யமுனை ஆற்றின் நீர் பயன்படுத்தமுடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காற்றில் உள்ள மாசுபாட்டை அளவிட காற்றுத்தரக் குறியீடு ஏக்யூஐ (AQI) பயன்படுத்தப்படுகிறது. ஏக்யூஐ எனப்படும் காற்றுத்தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது.

51 முதல் 100 என்பது திருப்திகரமானது. 101 முதல் 200 இருந்தால் காற்று மாசு மிதமானதாக நிர்ணயிக்கப்படுகிறது. 201 முதல் 300 அளவுக்குச் சென்றால் காற்றில் மாசு அதிகம். 301 முதல் 400 வரை மிக அதிகம். 401 முதல் 500 ஏக்யூஐ என்பது மிகமிக மோசமான காற்று மாசுபாடு என்று அளவிடப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் தற்போது காற்றின் தரம் 226 ஆக பதிவாகி இருப்பது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

ஐடிஓ பகுதியில் ஏக்யூஐ 226, இந்தியா கேட் பகுதியில் ஏக்யூஐ 251, டெல்லி எய்ம்ஸ் பகுதியில் ஏக்யூஐ 253 என காற்றின் தரம் பதிவாகியுள்ளது. காற்றின் தரத்தைச் சீராக்க 13 மாசு கட்டுப்பாட்டுக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

வானம் புகைமூட்டத்துடன் காணப்படுவதால் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியைக் கடுமையாகச் சாடிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா, “டெல்லியை மாசற்ற டெல்லியாக மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.

“இன்று யமுனையின் நிலையைப் பாருங்கள். டெல்லி கேஸ் சேம்பராக (gas chamber) மாறிவிட்டது,” என்று விமர்சித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்