கோல்கத்தா: இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் சூறாவளி காரணமாக வியாழக்கிழமை (அக்டோபர் 24) மாலை முதல் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) காலை வரை விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள ‘டாணா’ என்று அழைக்கப்படும் அந்தச் சூறாவளி, வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூறாவளி கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதனால் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலோரத்தில் வசிப்பவர்கள் கவனமாக இருக்குமாறும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தர்மா துறைமுகத்திலும் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்குவங்கத்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.