ஓடுபாதையில் விமான வால் பகுதி உரசி விபத்து

ஓடுபாதையில் விமான வால் பகுதி உரசி விபத்து

கோப்புப்படம்: மாலை மலர்

28 Sep 2026 - 5:19 pm

1 mins read

பெங்களூரு: அசாம் மாநிலம் கௌஹாத்தியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கும்போது, அதன் வால் பகுதி ஓடுபாதையில் உரசி விபத்துக்குள்ளானது.

பெங்களூரு கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின்போது அங்கு பலத்த காற்று வீசியதன் காரணமாக விமானம் இயல்புக்கு மாறாக தரையிறங்க வேண்டிய சூழ்நிலை உருவானது என இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்தது.

முதல் முயற்சியில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடியாததால், விமானி அதனை மீண்டும் வானில் வட்டமடிக்கச் செய்தார். அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது முயற்சியின்போது, எதிர்பாராதவிதமாக விமானத்தின் பின்பகுதி ஓடுபாதையை தொட்டு உரசியது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தில் பயணிகள், விமானப் பணியாளர்கள் யாருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என்றும் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து வழக்கமான நடைமுறைகளின்படி உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுந்த பராமரிப்பு, பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகே அந்த விமானம் மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்படும் என இண்டிகோ நிர்வாகத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்