விமானக் கட்டண விதிமுறை: இந்திய அரசுக்கு மூன்று வாரம் கெடு

விமானக் கட்டண விதிமுறை: இந்திய அரசுக்கு மூன்று வாரம் கெடு

கோப்புப்படம்: புளூம்பெர்க்

18 Aug 2026 - 6:15 pm

2 mins read

புதுடெல்லி: அடுத்த மூன்று வாரங்களுக்குள் புதிய விமானப் போக்குவரத்து ஒழுங்குவிதிகளை இந்திய அரசு வகுக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் கட்டண உயர்வு குறித்தும் பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்தும் கவலை எழுந்துள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானச் சட்டத்தின்கீழ், ஒழுங்குவிதிகளை வகுக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன், வரைவு விதிகள் அடங்கிய அறிக்கை மூடிய உறையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடந்துவருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், வரைவு விதிகளை ஏழு நாள்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் புதிய விதிகளுக்குக் கீழ்ப்படியாத விமான நிறுவனங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

“விமான நிறுவனங்கள் ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால், அவற்றின் சேவைகளை உடனடியாக முடக்குங்கள்,” என்று நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர்.

தனியார் விமான நிறுவனங்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டு, அதிகப்படியாகக் கட்டணத்தை உயர்த்துவதைக் கட்டுப்படுத்த தகுந்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரி, சமூக ஆர்வலர் எஸ்.லட்சுமிநாராயணன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, பண்டிகைக் காலங்களிலும் அவசரக் காலங்களிலும் கட்டணங்களை மிகக் கடுமையாக உயர்த்தி, பயணிகளைச் சுரண்டுவதைத் தடுக்க, வலுவான தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒழுங்குமுறை அமைப்பு தேவைப்படுவதாக மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

தனியார் விமானங்கள் இலவசமாக அனுமதிக்கும் பயணப்பெட்டிகளின் எடை அளவை 25 கிலோவிலிருந்து 15 கிலோவாகக் குறைத்துள்ளதையும், முன்னர் இலவசமாக வழங்கப்பட்ட சேவைகளுக்குத் தனித்தனியாகக் கட்டணம் வசூலிப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து, பயணிகளின் நலன் காக்க, தகுந்த நடைமுறைகளுடன் கூடிய விதிகளை விரைவில் வெளியிடுமாறு நீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் சார்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அனில் கௌசிக், புதிய விதிகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க மூன்று வார காலம் அவகாசம் கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

குறிப்புச் சொற்கள்