ஆள் பற்றாக்குறையால் தத்தளிக்கும் இந்திய விமான நிலைய ஆணையம்

ஆள் பற்றாக்குறையால் தத்தளிக்கும் இந்திய விமான நிலைய ஆணையம்

கோப்புப் படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

21 Nov 2026 - 5:29 pm

2 mins read

புதுடெல்லி: உலகின் அதிவேகமாக வளர்ந்துவரும் விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

தற்போது நாட்டில் 166 விமான நிலையங்கள் செயல்பட்டுவரும் நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் மேலும் நூறு விமான நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அசுர வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இந்திய விமான நிலைய ஆணையத்தில் நிலவும் கடுமையான ஆள் பற்றாக்குறையும் உயர் பதவிகளில் ஏற்பட்டுள்ள தலைமை வெற்றிடமும் உருவெடுத்துள்ளன.

விமான நிலையச் செயல்பாடுகளின் முதுகெலும்பாகத் திகழும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக, ஆணையத்தின் மூன்று மிக முக்கியப் பதவிகளுக்கு முழுநேர அதிகாரிகள் நியமிக்கப்படாமல், பிற துறை அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த விபுல் குமார் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூடுதல் செயலர் புனீத் கன்சால் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.

அதேபோல் விமானவழி செலுத்தல் சேவைகள் பிரிவுத் தலைவரான எம். சுரேஷ் ஓய்வுக்குப் பிறகு, மனிதவளத் துறை உறுப்பினர் நிவேதிதா துபே அத்துறையைக் கூடுதலாகக் கவனிக்கிறார்.

ஆணையத்தின் செயல்பாடுகள் பிரிவுத் தலைவர் பதவி கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் காலியாக உள்ளது. தற்போது, நிதித்துறை உறுப்பினர் பங்கஜ் மல்ஹோத்ரா இப்பிரிவின் கூடுதல் பொறுப்புத் தலைவராகச் செயல்படுகிறார்.

முழுநேர அதிகாரிகள் இல்லாததால் அனைத்துலக அளவிலான ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வது முதல் கொள்கை முடிவுகளை எடுப்பது வரை அனைத்திலும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்படி, இந்திய விமான நிலைய ஆணையத்தின் பல்வேறு பிரிவுகளில் ஏறக்குறைய 1,667 நிர்வாகப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 349 பணியிடங்களுக்கு மட்டுமே ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி முடித்துத் தன்னிச்சையாகப் பணியாற்றக் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் இரண்டாண்டுகள் வரை ஆகும். மேலும், புதிய விமான நிலையங்கள் திறக்கப்படும்போது, அனுபவமிக்க கட்டுப்பாட்டாளர்கள் அங்கு மாற்றப்படுவதால் ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களில் பணிச்சுமை அதிகரித்து, ஊழியர்களுக்கு விடுப்புகூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்