இந்தியாவில் 33 நாள்களுக்கு ஒரு விமான நிலையம் அல்லது முனையம் கட்டப்படுகிறது: மத்திய அரசு

இந்தியாவில் 33 நாள்களுக்கு ஒரு விமான நிலையம் அல்லது முனையம் கட்டப்படுகிறது: மத்திய அரசு

2 mins read
dac83e64-35d4-4b2e-8b18-6bd916f4c779
நாடு முழுவதும் 50 விமான நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. - படம்: விக்கிபீடியா

புதுடெல்லி: இந்தியாவில் 33 நாள்களுக்கு ஒரு புதிய விமான நிலையம் அல்லது விமான முனையம் கட்டப்பட்டு வருவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) நடைபெற்ற தேசிய நகர்ப்புற, சொத்துச்சந்தை மேம்பாட்டு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 50 புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் சொத்துச்சந்தை துறையின் வளர்ச்சியில் விமான நிலையங்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளதாகத் தெரிவித்த அவர், சொத்துச்சந்தை மேம்பாட்டு நடவடிக்கைகளில் மக்களின் தரமான வாழ்வு குறித்து கவனம் செலுத்துவதும் ஒன்று என்றார்.

விமானப் போக்குவரத்து சந்தையில் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் தற்போது 165 விமான நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 50 விமான நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

இத்தகைய நடவடிக்கை நாட்டின் ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப் பெரிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்றும் திரு ராம் மோகன் நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய ரியல் எஸ்டேட் துறையின் மதிப்பு எதிர்வரும் 2030ஆம் ஆண்டு ஒரு டிரில்லியன் (ரூ.91 லட்சம் கோடி) டாலராகவும், 2047ஆம் ஆண்டுக்குள் 5 முதல் 7 டிரில்லியன் டாலராகவும் (ரூ.453 லட்சம் கோடி முதல் ரூ.634 லட்சம் கோடி) உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இத்தகைய சூழலில் வாடகை வீடுகள் குறிப்பாக இளையர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடும் திட்டங்களை ரியல் எஸ்டேட் துறையினர் மேம்படுத்துவது அவசியம் என்றார்.

“விமான நிலையங்களுக்கு அருகே உயரமான கட்டடங்களைக் கட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த விவகாரம் விமானப் போக்குவரத்து பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. இதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை.

“இந்த விவகாரத்திற்கு உரிய தீர்வு காண்பது தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்றும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்