தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 9 வரை

தென்கொரியாவில் வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தமாகும் விமான நிலைய ஊழியர்கள்

2 mins read
7b6741e4-bb36-4955-ad18-bdcedaba1dbe
வேலை நேரத்தை மாற்றும்படி ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். - படம்: இன்ச்சியோன் விமான நிலையம் / ஃபேஸ்புக்

சோல்: தென்கொரியாவில் 15 விமான நிலையங்களில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஆயத்தாகி வருகின்றனர்.

தென்கொரியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) மிகப் பெரிய விடுமுறைக் காலம் வருவதால் பயணிகளுக்கு அது சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. சூசோக் (Chuhseok) அறுவடைத் திருவிழா அக்டோபரில் மூன்று நாள்கள் நடைபெறும்.

நாட்டில் உள்ள பெரிய விமான நிலையங்களைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் இம்மாதம் (செப்டம்பர்) 19ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை வேலை செய்யப்போவதில்லை என்று தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர்கள் அத்தகவலை வெளியிட்டனர். ஏறக்குறைய 15,000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை நேரத்தை மாற்றியமைக்கும்படி அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது இரண்டு வேலை நேரங்களில் மூன்று குழுக்கள் வேலை செய்கின்றன. இரண்டு நாள்கள் பகல் நேர வேலையைத் தொடர்ந்து ஊழியர்கள் இரண்டு இரவு நேர வேலை செய்கின்றனர்.

விமான நிலையம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காக அத்தகைய ஏற்பாடு நடைமுறையில் உள்ளது. அதனை மாற்ற நான்கு குழுக்கள் தேவை என்கின்றனர் ஊழியர்கள். அப்போது இரவு நேர வேலைக்குப் பிறகு போதிய ஓய்வு கிடைக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

விமான நிலையத்தில் வேலை செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஊழியர்கள் முன்வைத்துள்ளனர். இன்சியோன் விமான நிலையம் சென்ற ஆண்டு (2024) விரிவுபடுத்தப்பட்டதை அவர்கள் சுட்டினர்.

“எங்களின் கோரிக்கை பாதுகாப்பான வேலை இடம், பாதுகாப்பான விமான நிலையம் தொடர்புடையது. இன்சியோன் அனைத்துலக விமான நிலைய நிறுவனமும் கொரியா விமான நிலையங்கள் நிறுவனமும் நிலைமையில் மாற்றம் செய்வதற்கான அறிகுறி எதனையும் வெளிப்படுத்தவில்லை என்றால் வேலை நிறுத்தம் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும்,” என்று ஊழியர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்