புதுடெல்லி: டெல்லியில் செங்கோட்டைக்கு அருகே காரை வெடிக்கச் செய்தவர் அல் ஃபலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இளம் மருத்துவர் என்று கூறப்படுகிறது.
அதனால் இனி தங்கள் நிலை என்ன என்பது தெரியாமல் அப்பல்கலைக்கழக மாணவர்கள் குழப்பத்தில் இருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
தற்போது அந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட வருங்காலத்தைப் பாதுகாக்குமாறு மாணவர்களும் மருத்துவத் துறைப் பிரதிநிதிகளும் அதிகாரிகளுக்குக் குரல் கொடுத்து வருகின்றனர்.
அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து அல் ஃலா இதுவரை தங்களிடம் எதுவும் தெரியப்படுத்தவில்லை என்று அதன் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பது குறித்து இந்திய மருத்துவச் சங்கத்தின் பேச்சாளரான டாக்டர் துருவ் சாவ்ஹன் பெரும் கவலை தெரிவித்தார்.
“மற்றவர்களின் செயல்களால் எல்லா மாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது. அந்தப் பல்கலைக்கழகம் உன்னிப்பாகக் கண்காணிக்கலாம். ஆனால், மாணவர்களின் வேலை தொடர்பான வருங்காலம் பலியாகக்கூடாது,” என்று அவர் விவரித்தார்.
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டோர் மீது கவனம் செலுத்தியே நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று சாவ்ஹன் குறிப்பிட்டார்.

