அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம்

1 mins read
52b6895d-c9bb-4051-ac08-61ba30ae985b
முதலிடம் பிடித்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. - படம்: தினமணி

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்ததில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, பொங்கல் திருநாளில் அவனியாபுரத்திலும், வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) பாலமேட்டிலும் போட்டிகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று (ஜனவரி 17) கோலாகலமாக நடைபெற்றது.

இப்போட்டியைப் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.

இதில், கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். மதுரை பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 16 காளைகளைப் பிடித்து இரண்டாம் இடத்தையும், மதுரை வாகைக்குளம் பாசிங்காபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் 11 காளைகளைப் பிடித்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

முதலிடம் பிடித்த வீரர் கார்த்திக்கு அமைச்சர் மூர்த்தி காருடன் மூன்று லட்சம் ரூபாய் ரொக்கமும் பரிசாக வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தருக்கு இருசக்கர வாகனத்துடன் இரண்டு லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஏ.வி.எம். பாபுவின் காளை, சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்டது. அந்தக் காளையின் உரிமையாளருக்கு உழுவை இயந்திரம் பரிசாக வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்