வழுக்கைத் தலையை வாடகைக்குவிட்டு பணத்தை அள்ளும் கேரள ஆடவர்

2 mins read
7f2aa983-6e21-4a49-946c-3fb51ea9c60e
வித்தியாசமாக யோசித்து, விளம்பரத் தூதராக மாறிய ஷஃபீக் ஹாஷிம். - படம்: இந்திய ஊடகம்

ஆலப்புழா: கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் தமது வழுக்கைத் தலையில் நிறுவனங்களின் விளம்பரத்தை வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.

தலையில் வழுக்கை விழுந்துவிட்டதே என்று வருத்தத்தில் முடங்கிவிடாமல், அதனையே வருவாய் ஈட்டித் தரும் பகுதியாக மாற்றி இருக்கிறார் அந்த ஆடவர்.

பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று அவற்றைக் காணொளியாக வெளியிட்டு வரும் 36 வயதான ஷஃபீக் ஹாஷிம் என்பவர்தான் அந்த வித்தியாசமான மனிதர்.

தமக்கு அப்படி ஒரு யோசனை பிறந்தது பற்றி தமது எக்ஸ் பதிவில் அவர் விளக்கியுள்ளார்.

“எனது வழுக்கையில் செயற்கையாக முடி முளைக்க வைப்பதற்கான சிகிச்சை எடுக்கலாமா என யோசித்தேன். பின்னர், வழுக்கை என்பது இயற்கை; அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

“மிகவும் யோசித்தபோது, எனது வழுக்கைத் தலையையே விளம்பரம் செய்வதற்கு வாடகைக்கு விட்டால் என்ன என்று எனக்குள் தோன்றியது. அதனை உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கினேன்,” என்று அந்தப் பதிவில் ஷஃபீக் தெரிவித்துள்ளார்.

தமது தலையில் விளம்பரம் செய்யலாம் என்று பல முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்ட பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

‘டாட்டூ ஸ்டிக்கர்’ (tattoo sticker) மூலம் நிறுவனங்களின் விளம்பரத்தை வழுக்கைத் தலையில் பதிக்க வேண்டும்; ஊர் ஊராகச் சென்று வெளியிடும் காணொளிகளில் அந்த ‘விளம்பரத் தலை’யைக் காட்ட வேண்டும்; குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு அவரது தலையில் அந்த விளம்பரம் இருக்க வேண்டும் என்பன போன்றவை நிறுவனங்களின் நிபந்தனைகள்.

தற்போது பிரபலமாகிவிட்டதால், ஒரு விளம்பரத்தை மூன்று மாதங்களுக்குத் தலையில் வெளியிட ரூ.50,000 கட்டணம் வசூலிக்கிறார் ஷஃபீக்.

யூடியூப்பில் இவரது காணொளியைக் கண்ட பின்னர் வழுக்கைத் தலையுடன் இருக்கும் பலரும் அந்தப் புதிய யோசனையில் மூழ்கி இருப்பதாக மலையாளச் செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்