அனைத்து நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

2 mins read
bdf8d3cf-ebf0-4d74-b792-0c1d14ba7281
டெல்லியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை எட்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்தி காப்பகங்களில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: தெரு நாய்களை உடனடியாக அகற்றி, காப்பகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்ற தனது முந்திய உத்தரவை இந்திய உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்தது.

புதிய உத்தரவின்படி, தெருக்களில் இருந்து அப்புறப்படுத்தப்படும் நாய்களை கருத்தடைக்குப் பின்னர் தடுப்பூசி போட்டு விடுவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விலங்குகள் நல ஆர்வலர்கள் ஒருமித்து குரலெழுப்பியதை அடுத்து, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் மாற்றம் செய்துள்ளது.

முன்னதாக, டெல்லி உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் தெரு நாய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் நாய்க்கடிக்கு ஆளானதை அடுத்து, டெல்லியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை எட்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்தி காப்பகங்களில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி உள்ளிட்டோர் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தியாவில் 52.50 மில்லியன் தெருநாய்கள் இருப்பதாகக் கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. டெல்லியில் மட்டும் ஒரு மில்லியன் தெருநாய்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த எண்ணிக்கை சரிதானா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்நிலையில், அப்புறப்படுத்தப்படும் அனைத்து தெருநாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என்றும் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களைத் தவிர மற்ற நாய்களை விடுவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

“தெருநாய்களுக்குப் பொது இடங்களில் உணவு அளிக்கக்கூடாது. பிடித்துச் செல்லப்பட்ட நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு விடுவிக்க வேண்டும். ரேபிஸ் மற்றும் தொற்றுள்ள நாய்களை மட்டுமே காப்பகங்களில் அடைக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்