புதுடெல்லி: மத்திய கிழக்குப் பகுதியில் நீடித்துவரும் கடும் மோதலின் தாக்கத்தில் இருந்து இந்தியக் குடிமக்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்த மோதல் என்பது மாறிக்கொண்டிருக்கும் ஒரு சூழல் என்றும் இதனால் உலகம் முழுவதும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் திரு மோடி கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதியைப் போர் மேகங்கள் தொடர்ந்து சூழ்ந்துள்ள இவ்வேளையில், அதன் தற்போதைய நிலைமை, போர்த் தணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான இந்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில், நாட்டின் ஒட்டுமொத்த பொருளியல் சூழல் குறித்தும் அடுத்து எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
உணவு, எரிபொருள் பாதுகாப்பு உள்ளிட்ட சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளின் இருப்பு குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குடிமக்களுக்கு குறைந்தபட்ச சிரமம் மட்டுமே ஏற்படுவதை உறுதிசெய்ய, அரசின் அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் மக்களுக்குச் சிக்கலின்றிக் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்பொருள்கள் பதுக்கப்படுவதை முறையான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு முறியடிக்க வேண்டும் என்றும் திரு மோடி வலியுறுத்தினார்.
இதற்காக பல்வேறு அமைச்சர்கள், அமைச்சு செயலாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்ட அவர், ஒட்டுமொத்த அரசாங்க அணுகுமுறையில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்காக இத்தகைய ஏற்பாடு அவசியம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து செயல்படுவதும் முக்கியம் என்பதை துறைசார் குழுக்கள் உணர வேண்டும் என்றார் அவர்.
இக்கூட்டத்தில் அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி.வி. சோமநாதன், தற்போதைய உலகளாவிய சூழ்நிலை குறித்தும் விவரித்தார்.
தவிர, சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுகள், துறைகளால் இதுவரை எடுக்கப்பட்ட, திட்டமிடப்பட்டு வரும் தணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் விரிவான விளக்கத்தை அளித்தார்.

