அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்: உச்ச நீதிமன்ற நீதிபதி

2 mins read
92de9da5-0a78-4b55-8f0c-eb41bae0526c
ஆளுநரின் முயற்சியால் மணிப்பூரில் அமைதியும் இயல்பு நிலையும் விரைவில் மீட்கப்படும் என்றார் நீதிபதி. - கோப்புப்படம்: ஊடகம்

இம்பால்: மணிப்பூரில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள், அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் தீர்க்க முடியும் என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டு 12 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து நடைபெற்ற விழாவில் ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு பங்கேற்றது.

இந்நிகழ்வில் பேசிய நீதிபதி பி.ஆர்.கவாய், மணிப்பூர் இன மோதலுக்கான தீர்வு என்பது பேச்சுவார்த்தைகளில்தான் அடங்கி உள்ளது எனில், அந்தத் தீர்வு வெகு தொலைவில் இல்லை என்றார்.

“இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் உள்ள அனைவரும் அமைதியை மீட்டெடுக்க விரும்புகிறார்கள். தற்போதைய நிலைமையைத் தொடர யாரும் ஆர்வம் காட்டவில்லை என்பதை இந்தக்குழு அறிந்துள்ளது.

“நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல விரும்புகிறார்கள்,” என்றார் பி.ஆர்.கவாய்.

மேலும், ஆளுநரின் முயற்சியால் மணிப்பூரில் அமைதியும் இயல்பு நிலையும் விரைவில் மீட்கப்படும் என்று உறுதியாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, மணிப்பூரில் அமைதி முயற்சிக்கான நடவடிக்கையைச் சீர்குலைக்க சதி நடப்பதாகவும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு குழுவின் நிர்வாகிகள் மீது மற்றொரு குழுவினர் கொடூரத் தாக்குதல் நடத்தி இருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் இரு இனங்களுக்கு இடையேயான மோதல் கலவரமாக வெடித்தது. பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதனால், பலர் தங்கள் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் புக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர்.

அம்மாநிலத்தில் தற்போது அதிபர் ஆட்சி அமலில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்