கொச்சி: ஆசிரியர்கள் அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயிற்சி வழங்கப்படும் என்று இந்தியாவின் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து, ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு குறித்த இரண்டு நாள் அனைத்துலக மாநாடு கொச்சியில் வியாழக்கிழமை (ஜூலை 11) தொடங்கியது.
அதனைத் தொடங்கி வைத்த முதல்வர் பினராயி விஜயன், “மாநிலத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வழங்கப்படும். இதன்மூலம், பாடங்களை மேலும் சிறப்பாக கற்பிக்கும் ஆற்றலை அவர்கள் பெறுவார்கள்,” என்று கூறினார்.
அத்துடன், பள்ளியில் ஏழாம் வகுப்பில் இருந்து செயற்கை நுண்ணறிவு குறித்த பாடங்கள் பாடப்புத்தகங்களில் இடம்பெறும் என்றும் அதன்மூலம் அத்தொழில்நுட்பம் குறித்து மாணவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள் என்றும் திரு விஜயன் குறிப்பிட்டார்.
மேலும், “அறிவுப் பொருளியலாக மாறுவதற்கான பாதையில் கேரளா முன்னேறிச் செல்லும் இத்தருணத்தில் இந்த மாநாடு நடப்பது குறிப்பிடத்தக்கது. இது, நிலையான வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், அதற்கான வலிமை கேரளாவுக்கு உள்ளது என்பதை வெளிப்படுத்தவுமே இந்த மாநாடு நடத்தப்படுகிறது,” என்றும் அவர் சொன்னார்.