புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ், அண்மையில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், பெரும்பான்மையினருக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இது எதிர்க்கட்சியினர் மற்றும் சிறுபான்மையினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவருடைய பேச்சை வெறுப்புப் பேச்சாகச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சியினர் அவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் பதவி நீக்க தீர்மானத்தைத் தாக்கல் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்துப் பேசிய மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் கபில்சிபல், “சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடும் எந்த ஒரு நீதிபதியும் தனது பதவியேற்பு உறுதிமொழியை மீறுவதாகவே பொருள்படும்.
“அவ்வாறு தனது பதவியேற்பு உறுதிமொழியை மீறுவோர் பதவியில் நீடிக்க முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.
நீதிபதி சேகர் யாதவுக்கு ஆதரவு தெரிவிக்க பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் சிலர் வெளிப்படையாக முன்வந்தாலும், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சி யில் சர்ச்சைக்குரிய கருத்து களைக் கூறியது அரசியலமைப்பு விதிகளை மீறிய செயலாகும் என்று சட்டத்துறையினர் தெரிவித்துள்ளனர்.