புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவன் பகுதியில் உள்ள பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்திற்குச் சென்றதற்காக ஐந்து கோடி ரூபாய் பணம் பெற்றதாக எழுந்த புகார்களை இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறவே மறுத்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2023-ஆம் ஆண்டு ஆசிரமத்திற்கு முதன்முறையாக வருகை தர விராட் கோலிக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக மகாராஜ் தினேஷ் சர்மா என்பவர் அண்மையில் குற்றஞ்சாட்டினார். இக்கருத்து இணையத்திலும் ஊடகங்களிலும் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக விராட் கோலியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ஃபலாஹாரி மகாராஜ் கூறியுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் மகாராஜ் மீதுள்ள ஆழ்ந்த நம்பிக்கையும் மரியாதையுமே கோலியின் ஆசிரம வருகைக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் பிரேமானந்த் மகாராஜின் தீவிர பக்தர்கள் எனவும் அவர் பிருந்தாவன ஆசிரமத்திற்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும் ஆசிரம நிர்வாகம் கூறியுள்ளது.
பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்தைப் பொது வெளியில் விளம்பரப்படுத்தும் வகையில் விராட் கோலி அங்கு சென்றதாக ஒரு தரப்பினர் விமர்சித்துள்ளனர்.
பிரபல ஆன்மிகத் தலைவர் பிரேமானந்த் மகாராஜின் ‘குரு கிருபா குஞ்ச்’ ஆசிரம வளாகத்தில், அவரது 25 வயதான சீடர் ரசிக துலாரி என்பவர் நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
