பாட்னா: பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து இனி ஒருபோதும் விலக மாட்டேன் என பீகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) கூறினாா்.
பீகாரில் இவ்வாண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநில முதல்வர் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, இருமுறை பாஜக கூட்டணியிலிருந்து விலகி எதிா்க்கட்சிகளுடன் நிதீஷின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி கைகோத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த நாடாளுமன்றத் தோ்தலுக்கு முன்பு அக்கட்சி மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்பியது.
பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதீஷ் குமாரை மீண்டும் முதல்வராக முன்னிறுத்துவோம் என பாஜக முன்பே அறிவித்துவிட்டது.
அம்மாநிலத் தலைநகரான பாட்னாவில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் பல்வேறு நலத்திட்டங்களின் தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டார்.
அதன் பின்னர், நிதீஷ் குமாா் இல்லத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினாா்.
தொடர்புடைய செய்திகள்
இதில் தொகுதிப் பங்கீடு தொடா்பாக அமித் ஷாவிடம் தங்கள் தரப்பு கோரிக்கைகளை கூட்டணித் தலைவா் முன்வைத்ததாகக் கூறப்பட்டது.