புதுடெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரம், இதர மாற்று எரிபொருள்களை நோக்கிய பயணம் அண்மைக் காலத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் விநியோகிப்பாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, பயணிகள் வாகனப் பிரிவில் முதன்முறையாக பெட்ரோல் வாகனங்களை விஞ்சி, மாற்று எரிபொருள் வாகனங்களின் கூட்டுப் பங்கு 41.95 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இந்த மாற்று எரிபொருள் பிரிவில் மின்சார வாகனங்கள், சிஎன்ஜி, ஹைப்ரிட், எல்பிஜி வாகனங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. அதேவேளையில், பயணிகள் பிரிவில் பெட்ரோல் வாகனங்களின் பங்கு 40.85 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
நாட்டின் மொத்த புதிய வாகனப் பதிவில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள இருசக்கர வாகனப் பிரிவிலும் மாற்றம் தீவிரமடைந்துள்ளது.
வரலாற்று ரீதியாக முதன்முறையாக பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் சந்தைப் பங்கு 90 விழுக்காட்டுக்கும் கீழ் சரிந்துள்ளது.
அதேவேளையில், மாற்று எரிபொருளுக்கு அதிவேகமாக மாறிய பிரிவாக மூன்று சக்கர வாகனங்கள் திகழ்கின்றன. பதிவாகும் மூன்று சக்கர வாகனங்களில் சுமார் 60.5 விழுக்காடு மின்சாரத்தில் இயங்குபவை என்பது குறிப்பிடத்தக்கது.
2021ல் 30 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்த பெட்ரோல், டீசல் ஆட்டோக்களின் பதிவு தற்போது 15 விழுக்காட்டுக்கும் கீழ் குறைந்துள்ளது.
கார்கள் பிரிவில் மின்சாரக் கார்களின் பயன்பாட்டை மேலும் விரைவுபடுத்த மின்னூட்டி உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
