ஆந்திரத்தின் ஒரே தலைநகர் அமராவதி: அங்கீகரித்தது மக்களவை

ஆந்திரத்தின் ஒரே தலைநகர் அமராவதி: அங்கீகரித்தது மக்களவை

1 mins read
05856edf-4dc1-43e3-bf03-fe19395979b4
காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. - கோப்புப்படம்: தினமணி

புதுடெல்லி: ஆந்திர மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதி, சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் புதன்கிழமை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

முன்னதாக, இந்த மசோதாவை காங்கிரஸ் முழு மனத்துடன் ஆதரிப்பதாக அக்கட்சி உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் மக்களவையில் பேசும்போது குறிப்பிட்டார்.

பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்று அமராவதியும் வளர்ச்சி காண வேண்டும் என்றும் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாஜக எம்பி சி.எம். ரமேஷ் பேசும்போது, ஆந்திரத் தலைநகரை இனி யாரும் மாற்ற இயலாத நிலையை இம்மசோதா மூலம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

எனினும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இந்த சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த மிதுன் ரெட்டி, அமராவதியைத் தலைநகராக்க 34,000 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசு கையகப்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு இலவச வீட்டு மனை, இலவசக் கல்வி உள்ளிட்டவை வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் அவை எதையும் ஆந்திர அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் மசோதா மீது நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பின் மூலம் அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்