புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் நடப்பில் உள்ள 2026ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் ஏறக்குறைய ரூ.4.53 லட்சம் கோடி (48 பில்லியன் டாலர்) முதலீடு செய்ய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாசி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவுடனான அமேசான் நிறுவனத்தின் நீண்டகால வணிக உறவை ஆண்டி ஜாசி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு, கிளவுட் துறைக்கு முக்கியத்துவம்
இந்தியாவில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மட்டும் கூடுதலாக 13 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்மூலம், 2026-2030 காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் துறையில் அமேசானின் ஒட்டுமொத்த முதலீடு 21 பில்லியன் டாலரைத் தாண்டும்.
இது அமேசான் அறிவித்துள்ள ஒட்டுமொத்த 48 பில்லியன் டாலர் முதலீட்டின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
பிரதமரைச் சந்தித்த பிறகு திரு ஆண்டி ஜாசி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இந்தியாவில் முதன்முதலில் கால் பதித்தோம். அன்றிலிருந்து இணைய வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் ஆகிய துறைகளில் இந்திய மக்களின் ஆதரவு எங்களுக்கு அபாரமாக கிடைத்து வருகிறது.
“பிரதமர் மோடியின் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’, ‘சுயசார்பு இந்தியா’ ஆகிய தொலைநோக்குப் பார்வைகளால் நாங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளோம்.
“இந்தியாவின் இந்த அசுர வளர்ச்சிப் பயணத்தில் அமேசான் என்றும் ஒரு நம்பகமான நீண்டகால பங்காளியாகத் தொடரும்.
“2030ம் ஆண்டுக்குள் 38 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 7.55 லட்சம் கோடி மதிப்பிலான மின்னணு வர்த்தக ஏற்றுமதியைச் செயல்படுத்தவும் 1.5 கோடி சிறு வணிகர்கள், 40 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு செயற்கை நுண்ணறிவின் பலன்களைக் கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளோம்,” எனப் பகிர்ந்துகொண்டார்.
அமேசான் நிறுவனத்தின் இந்த பிரம்மாண்ட முதலீட்டு அறிவிப்பு, மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இதனை வரவேற்றுப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “ஆண்டி ஜாசியுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. இந்தியாவில் அமேசான் மேற்கொள்ளும் 4.5 லட்சம் கோடி ரூபாய் சாதனை முதலீட்டை வரவேற்கிறேன். இது நமது இளையர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும். அதோடு, இந்தியாவில் முதலீடு செய்வதில் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் ஆர்வத்தையும் இது காட்டுகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

