இந்தியாவின் ஆகப் பெரிய பணக்காரக் குடும்பங்களில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பம் தொடர்ந்து முதலிடத்தில் வந்துள்ளது.
சென்ற ஆண்டு (2024) அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 10 விழுக்காடு கூடி, 28 லட்சம் கோடி ரூபாயாக (US$11.43 பில்லியன்) இருந்தது. அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பைப் போன்று அது இரண்டு மடங்கு. அதானி குடும்பத்திற்கு 14.01 லட்சம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஆனால் முதல் தலைமுறையினரால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களில் அதானி குடும்பத்திற்கு முதலிடம்.
இந்தியாவின் 300 ஆகப் பெரிய பணக்காரக் குடும்பங்களின் ஒட்டுமொத்தச் சொத்து மதிப்பு 1.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் (140 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்). அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 விழுக்காட்டுக்கும் அதிகம். அம்பானி குடும்பத்தின் சொத்து மட்டும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 விழுக்காடு.
பார்க்லேஸ் வங்கியுடன் இணைந்து ஹுருண் ஆய்வு, ஊடக, முதலீட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
குமார மங்களம் பிர்லா குடும்பத்தின் சொத்து மதிப்பு 20 விழுக்காடு கூடி 6.47 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. தலைமுறை தலைமுறையாய்ப் பணக்காரர்களாக இருப்போர் பட்டியலில் அது இப்போது ஒரு நிலை முன்னேறி இரண்டாம் இடத்தில் உள்ளது. ஜிண்டால் குடும்பம், 5.70 லட்சம் கோடி ரூபாயுடன் மூன்றாம் நிலையிலும் பஜாஜ் குடும்பம், 5.64 லட்சம் கோடி ரூபாயுடன் நான்காம் இடத்திலும் வந்தன.
இந்தியாவில் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் 8,750 கோடி ரூபாய்) அதிகமாகச் சொத்துச் சேர்த்திருக்கும் குடும்ப நிறுவனங்களின் எண்ணிக்கை 37 கூடுதலாகி இப்போது 161ஆக உள்ளது. அவற்றில் கிட்டத்தட்ட கால்வாசி, பங்குச் சந்தையில் இடம்பெறவில்லை என்பதை அறிக்கை சுட்டியது.