ஆரம்பப் பங்கு வெளியீட்டில் வரலாறு படைக்க முனைகிறது அம்பானியின் ஜியோ

ஆரம்பப் பங்கு வெளியீட்டில் வரலாறு படைக்க முனைகிறது அம்பானியின் ஜியோ

படம்: ராய்ட்டர்ஸ்

21 Oct 2026 - 12:25 pm

2 mins read

மும்பை: முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் நாட்டின் மிகப் பெரிய ஆரம்பப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் இந்த வாரம் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்ட இலக்கு வைத்துள்ளது.

இலவச அழைப்புகள், மலிவான தரவுச் சேவை மூலம் போட்டி நிறுவனங்களை வீழ்த்தி, இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் காலடி எடுத்துவைத்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவனம் புதிய மைல்கல்லைத் தொடுவதற்குத் திட்டமிடுகிறது.

2016ஆம் ஆண்டு அது முன்னெடுத்த தீவிர உத்தியால் சந்தையில் கடுமையான போட்டாபோட்டி உருவாகி, ஒரே ஒரு தரப்புக்கு மட்டுமே லாபம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் இம்முறை, திரு அம்பானியின் ஜியோ நிறுவனம் அதிக எச்சரிக்கையுடன் சந்தைக்கு வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய கம்பியில்லாத் தொலைத்தொடர்புச் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், அதன் மிக நெருங்கிய போட்டி நிறுவனமான பாரதி ஏர்டெல்லைக் காட்டிலும் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டுக்கும் குறைவான மதிப்பீட்டைக் கோருகிறது.

பங்குச்சந்தைக்குள் நுழைய முனைவது, திரு அம்பானி 20 ஆண்டுகளுக்குப் பிறகு மூலதனச் சந்தைக்குத் திரும்புவதைக் குறிக்கிறது. இந்தப் பங்கு வெளியீடு, ஜியோவின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசுக்குப் பெருமதிப்பைச் சேர்க்கும் என்று அவர் கூறினார்.

ஆனால், உண்மை நிலவரம் அவ்வளவு சாதகமாக இல்லை என்று கூறப்படுகிறது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு மோசமான வருடாந்தரச் செயல்திறனை நோக்கிய பாதையில் ரிலையன்ஸ் பங்குகள் செல்வதாகச் சொல்லப்படுகிறது.

ஜியோவின் ‘ஐபிஓ’ பங்குகளின் விற்பனை சில்லறை முதலீட்டாளர்களுக்காக அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கப்பட்டு அக்டோபர் 23ல் நிறைவடைகிறது.

ஜியோவின் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்கு விற்பனை, ஒரு பங்கின் விலை 1,065 ரூபாய் (S$14.36) முதல் 1,119 ரூபாய் வரையிலான சந்தை விலை வரம்பின் உச்சக் கட்டத்தில், நிறுவனத்தின் மதிப்பை 107 பில்லியன் அமெரிக்க டாலராகக் கணக்கிடுகிறது. அதேவேளையில் மற்றொரு தொழிலதிபர் சுனில் பாரதி மிட்டலின் கம்பியில்லாத் தொலைத்தொடர்புச் சேவை நிறுவனத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 123 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

குறிப்புச் சொற்கள்