புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின்போது உடனடி மருத்துவ உதவி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடுமையான புதிய சேவை விதிகளை வெளியிட்டுள்ளது.
விபத்து நேர்ந்த இடம் 10 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இருந்தால், அவசர அழைப்பு வந்த 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்குச் சென்றடைய வேண்டும்.
அவசர அழைப்பை ஒரு நிமிடத்திற்குள் ஏற்க வேண்டும். அழைப்பை ஏற்ற இரண்டு நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் பயணத்தைத் தொடங்க வேண்டும்.
விபத்தில் காயமடைந்தவரை அழைப்பு பெறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.
இந்த ஒரு மணி நேரக் கட்டுப்பாடு, ஒரு கடுமையான சாலை விபத்துக்குப் பிறகு ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்பதை உணர்த்துகிறது. இக்காலகட்டம் ‘பொன்னான நேரம்’ எனக் குறிப்பிடப்படுகிறது.
பத்து நிமிட இலக்கைத் தவறவிட்டால், ஒரு நிகழ்வுக்கு ரூ. 10,000 அபராதம். அழைப்பை ஏற்கத் தவறினால், அவசர அழைப்பை நிராகரித்தால் ரூ. 10,000 அபராதம்.
அழைப்பை ஏற்று இரண்டு நிமிடங்களுக்குள் புறப்படாவிட்டால், தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். உரிய செயலியைப் பயன்படுத்தாமலோ அல்லது ‘ஜிபிஎஸ்’ சேவை முடக்கப்பட்டிருந்தாலோ நாளொன்றுக்கு ரூ. 2,500 அபராதமும் ஆம்புலன்சில் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் அல்லது தகுதியான ஓட்டுநர் அல்லது மருத்துவப் பணியாளர்கள் இல்லை என்றால் ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும்.
சாலை விபத்துகளுக்குப் பதிலளிப்பதில் ஏற்படும் தாமதங்கள், உச்ச நீதிமன்றச் சாலைப் பாதுகாப்புக் குழு, தலைமை கணக்குத் தணிக்கையாளர் குழு நடத்திய செயல்திறன் தணிக்கை ஆகியவற்றால் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுற்றறிக்கை தெரிவிக்கிறது.


