திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கூட்டத்தில் ‘108’ ஆம்புலன்ஸ் புகுந்ததில் பெண்கள் இருவர் உயிரிழந்தனர்; மேலும் மூவர் காயமுற்றனர்.
இவ்விபத்து திங்கட்கிழமையன்று (ஜனவரி 6) திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலத்தில் உள்ள நரசிங்கபுரம் அருகே நேர்ந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் புங்கனூரிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடைப்பயணமாகச் சென்ற பக்தர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
நோயாளி ஒருவருடன் மதனப்பள்ளியிலிருந்து திருப்பதி நோக்கிச் சென்ற அவசர மருத்துவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அந்த பக்தர்கள்மீது மோதியதாகச் சொல்லப்படுகிறது.
அதில், அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணம்மா, 45, பெத்த ரெட்டம்மா, 40, என்ற இரு பெண்களும் மாண்டனர். காயமடைந்த மூவர் திருப்பதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடும்பனி காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது.
விபத்து குறித்து சந்திரிகிரி காவல்துறையினர் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் நடந்தே திருப்பதி கோவிலைச் சென்றடைகின்றனர். இந்தியாவின் ஆகப் பணக்காரக் கடவுளாக அறியப்படும் திருப்பதி ஏழுமலையானை வழிபட ஒவ்வொரு நாளும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திருப்பதியில் திரள்கின்றனர்.

