தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

25% வரியைத் தொடர்ந்து 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

2 mins read
684105c2-921e-4349-8695-d6b18428652c
அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் விதித்துள்ள பொருளியல் தடையால் மொத்தம் US$220 மில்லியன் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியப் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில் ஆறு இந்திய நிறுவனங்களுக்கு அவரது நிர்வாகம் பொருளியல் தடை விதித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு டிரம்ப் 25 விழுக்காடு வரி விதித்த தகவல் வெளியான பரபரப்பு அடங்குவதற்குள் ஆறு இந்திய நிறுவனங்களுக்கு பொருளியல் தடைகளையும் விதித்திருக்கிறார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகளவில் ராணுவத் தளவாடங்களை வாங்கி வருகிறது என்றும் உக்ரேனில் போரை நிறுத்த முயலும் உலக அணுகுமுறைக்கு எதிரான செயல் அது என்றும் டிரம்ப் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அந்தச் செயலுக்கு அமெரிக்கா அபராதம் விதிக்கும் என்றும் ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளர்.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டது.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய், மெத்தனால் உள்ளிட்ட பெட்ரோகெமிக்கல் பொருள்களை வாங்கும் 20 நிறுவனங்களுக்குப் பொருளியல் தடை விதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அவற்றில் ஆறு நிறுவனங்கள் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுபவை.

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா கட்டுப்பாடு விதித்திருக்கும் நிலையில், அந்த நிறுவனங்கள் அந்தக் கட்டுப்பாடுகளை மீறி ஈரானிடமிருந்து பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருள்களை வாங்கி விற்பனை செய்வதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டி இருக்கிறது .

அமெரிக்கா பொருளியல் தடை விதித்திருக்கக்கூடிய ஆறு இந்திய நிறுவனங்களுமே இந்தியாவில் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தில் முதன்மையாகச் செயல்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளியல் தடையால் மொத்தம் 220 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ஆல்கெமிக்கல் சொல்யூசன்ஸ் என்னும் நிறுவனம்தான் ஆகப் பெரிய பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ஈரானிடமிருந்து 84 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெட்ரோகெமிக்கல் பொருள்களை வாங்கி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்