இந்தியாவை மட்டும் குறிவைக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் : ஜெய்சங்கர் புகார்

2 mins read
71c756d2-e9d3-4589-a6dd-0ca6b9d15cfd
திரு ஜெய்சங்கர், போலந்த் துணைப் பிரதமர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி சந்திப்பு புதுடெல்லியில் நிகழ்ந்தது. - படம்: ஜெய்சங்கர் எக்ஸ் பக்கம்

புதுடெல்லி: உக்ரேன் போர் விவகாரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவை மட்டும் குறி வைப்பதாக அதன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்யும் விவகாரத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்தியா ஏற்கெனவே பலமுறை தெளிவுப்படுத்திவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலந்து துணைப் பிரதமரும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ளார். இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார்.

அப்போது ரஷ்யா, உக்ரேன் விவகாரம் குறித்து போலந்து துணைப் பிரதமரிடம் ஜெய்சங்கர் விரிவாக விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது.

இந்த விலகாரம் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க் சென்றபோதும், அண்மைய தனது பாரிஸ் பயணத்தின்போதும் இந்தியத் தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

முன்பே குறிப்பிட்டதுபோல் கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவை மட்டும் குறிவைப்பது நியாயமல்ல என்பதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளதாக ஜெய்சங்கர் கூறினார்.

“இந்தியாவுக்கு மட்டும் வரிவிதிப்பது, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மூலம் தடைகள் விதிப்பது நியாயமல்ல. எங்களுடைய தேவைக்காகவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறோம். அதற்கு எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது,” என்றார் ஜெய்சங்கர்.

போலந்து துணைப் பிரதமர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்தும் ஜனவரி 19ல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போதும் திரு ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

அண்டை நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அதிகரிப்பதற்கு போலந்து உதவி செய்யக்கூடாது என்றும் பயங்கரவாதத்தை எந்த வகையிலும் சகித்துக் கொள்ளக்கூடாது என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

ஜம்மு, காஷ்மீர் பிரச்சினைக்கு ஐநா மூலம் தீர்வுகாண வேண்டுமென போலந்து வலியுறுத்தியுள்ள நிலையில், இந்தியா அதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பின் தலையீட்டையும் இந்தியா அறவே விரும்பவில்லை எனப் போலந்து துணைப் பிரதமரிடம் திரு ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

குறிப்புச் சொற்கள்