தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தடைசெய்யப்பட்ட அந்தமான் தீவிற்குள் நுழைந்த அமெரிக்கர் கைது

2 mins read
99e7d9c7-1ffc-438e-8935-67a268d221be
சென்டினெல் தீவு. - மாதிரிப்படம்

போர்ட் பிளேர்: பழங்குடியின மக்கள் வசிக்கும், வெளியாள்கள் நுழையத் தடைவிதிக்கப்பட்ட வடக்கு சென்டினெல் தீவில் நுழைந்ததாகக் கூறி, அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் அமெரிக்கர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை புதன்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தது.

மைக்கலோ விக்டரோவிச் போல்யகோவ், 24, என்ற அந்த ஆடவர் எந்த அனுமதியுமின்றி வடக்கு சென்டினெல் நுழைந்த சந்தேகத்தின்பேரில் மார்ச் 31ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

போல்யகோவ் மார்ச் 26ஆம் தேதி போர்ட் பிளேரைச் சென்றடைந்ததாகவும் அங்குள்ள குர்மா தேரா கடற்கரையிலிருந்து அவர் வடக்கு சென்டினெல் தீவிற்குச் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்தது.

சென்டினெல் மக்களுக்குத் தருவதற்காக ஒரு தேங்காயுடனும் ஒரு மென்பானக் கலனுடனும் மார்ச் 29 நள்ளிரவு 1 மணியளவில் அந்தக் கடற்கரையிலிருந்து ஒரு படகில் கிளம்பியதாகச் சொல்லப்படுகிறது.

அன்று காலை 10 மணியளவில் அத்தீவின் வடகிழக்குக் கரையை அடைந்த அவர், தொலைநோக்காடியின் (பைனாகுலர்) மூலம் அவ்வட்டாரத்தை நோட்டமிட்டார் என்றும் ஆனாலும், அங்கு ஒருவரும் அவர் கண்ணுக்குத் தென்படவில்லை என்றும் காவல்துறை விளக்கியது.

மேலும் ஒரு மணிநேரம் அங்கிருந்த அவர், பிறரது கவனத்தைக் கவர ஊதலை ஊதினார் என்றும் ஆனாலும் எந்தப் பலனும் இல்லை என்றும் கூறப்பட்டது.

பின்னர் அங்குத் தரையிறங்கி ஐந்து நிமிடங்கள் இருந்த போல்யகோவ், தாம் கொண்டுசென்றவற்றை கரையிலேயே வைத்துவிட்டு, சிறிது மண்ணைச் சேகரித்துக்கொண்டு, ஒரு காணொளியும் எடுத்துக்கொண்டு தம் படகிற்குத் திரும்பியதாகக் காவல்துறை கூறியது.

நண்பகல் 1 மணியளவில் அங்கிருந்து கிளம்பிய அவர், இரவு 7 மணியளவில் குர்மா தேரா கடற்கரையை அடைந்ததாகவும் உள்ளூர் மீனவர்கள் அவரைக் கண்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

கடந்த ஆண்டு அக்டோபரிலும் இவ்வாண்டு ஜனவரியிலும் போல்யகோவ் அந்தமானுக்குச் சென்றார்.

அவரது கைது குறித்த தகவல் இந்திய உள்துறை, வெளியுறவு அமைச்சுகளுக்கும் இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

கடந்த 2018 நவம்பரில் அமெரிக்காவைச் சேர்ந்த சமயப் பரப்பாளர் ஜான் சாவ் சென்டினெல் மக்களைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்களால் அவர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

சென்டினெல் மக்கள் புதிய கற்காலத்திற்கு முந்திய, உலகின் கடைசிப் பழங்குடி இனத்தவராக அறியப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்