வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் திருக்குறளை ஒன்றிணைந்து ஒப்புவித்த செயல் இரண்டு உலக சாதனைப் பட்டியல்களில் அதிகாரபூர்வமாக இடம்பெற்று உள்ளது.
உலகப் பொதுமறையான திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும் 1,330 தமிழர்கள் ஒரேநேரத்தில் ஒப்புவித்து சாதனை படைத்தனர்.
அமெரிக்காவின் வெவ்வேறு பத்து நகரங்களைச் சேர்ந்தவர்கள் அந்தச் சாதனை முயற்சியில் இறங்கினர். கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை சாதனை முயற்சிகள் தொடர்ந்தன.
அமெரிக்க நகரங்களான வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ, சிக்காகோ, ஜாக்சன்வில்லே, டல்லாஸ், சின்சினாட்டி, சான் அண்டோனியோ, ஆஸ்டின் போன்றவற்றில் செயல்படும் தமிழ்ச் சங்கங்கள் ஒன்றிணைந்து அதற்கு ஏற்பாடு செய்தன.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதுப் பிரிவினரும் அதில் பங்கேற்று திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்தனர். குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளையின் மேற்பார்வையில் அந்த நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.
வெவ்வேறு நகரங்களில் இருந்தவாறு 1,330 பேரும் 1,330 குறள்களையும் ஒப்புவித்த செயல் அரியதொரு சாதனையாகப் போற்றப்பட்டது. அதற்கேற்ப, ‘ஹை ரேஞ்ச்’, ‘ஸ்பாட்லைட்’ என்னும் இருவேறு சாதனைப் புத்தகங்களில் அந்தச் செயல் பதிவாகி உள்ளது.

