தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்நாட்டில் அமித்ஷா இரண்டு நாள் பிரசாரம்

2 mins read
d338fc76-40a2-4e1e-92e4-2794e0d640f3
இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. - படம்: பிடிஐ

மதுரை: இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 12, 13 தேதிகளில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 19 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய செயலாளர் ஜே.பி. நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

இந்நிலையில், அமைச்சர் அமித்ஷாவும் இருநாள் பயணமாகத் தமிழகம் செல்கிறார்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) பிற்பகலில் மதுரை விமான நிலையத்தைச் சென்றடையும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை செல்கிறார். அங்கு பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் தேவநாதனுக்கு ஆதரவாக வாகனப் பேரணி மூலம் அவர் வாக்கு சேகரிக்கவுள்ளார்.

சிவகங்கையில் இண்டியா கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும் இப்போதைய எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

பின்னர் மதுரை திரும்பும் அமித்ஷா, அங்கும் வாகனப் பேரணி மூலம் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவு திரட்டவுள்ளார்.

மறுநாள் காலையில் தக்கலை செல்லும் அவர், அங்கு கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாகனப் பேரணி நடத்தவுள்ளார். அதன்பின் பிற்பகலில் நாகை தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம். ரமேசுக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார்.

பின்னர் தென்காசி மாவட்டம், இலஞ்சி சென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு ஆதரவு திரட்டவுள்ளார்.

முன்னதாக, இம்மாதம் 4ஆம் தேதி அமித்ஷா தமிழகத்திற்குச் சென்று பிரசாரத்தில் ஈடுபடவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அப்பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்