அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஏழு வயது பாடல் நட்சத்திரத்துக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கித்தார் இசைக் கருவியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
எஸ்தர் லால்டுஹாவ்மி நம்தே எனும் அப்பெண், இந்தியாவின் ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலை அய்ஸ்வால் நகரில் மனத்தைக் கவரும் வண்ணம் பாடியதைத் தொடர்ந்து திரு அமித்ஷா சனிக்கிழமை (மார்ச் 15) கித்தாரை அன்பளிப்பாக வழங்கினார்.
“மிசோரமின் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் லால்டுஹாவ்மி நம்தே அய்ஸ்வாலில் இன்று ‘வந்தே மாதரம்’ பாடியதைக் கேட்டு மனமுருகினேன். இந்த ஏழு வயது (பிள்ளை) பாரதத்தின்மீது கொண்டுள்ள பற்று அவரின் பாடலில் அலைமோதியது. அதனால் அவர் பாடுவதைக் கேட்பது மெய்மறக்கச் செய்யும் அனுபவமாக அமைகிறது,” என்று திரு அமித்ஷா தமது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டார்.
தான் பாடிய ‘மா துஜே சலாம்’ பாடல் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து நம்தே 2020ஆம் ஆண்டு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார். அவரின் கம்பீரக் குரலும் நாட்டுப்பற்றும் பலரைக் கவர்ந்தன.
மிசோரம் அரசாங்கத்திடமிருந்து பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் நம்தே. அம்மாநில ஆளுரின் சிறப்பு அங்கீகாரமும் அவற்றில் அடங்கும்.

