தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2026 மார்ச் 31க்குள் மாவோயிஸ்ட்டுகள் அழிக்கப்படுவர்: அமித்ஷா உறுதி

2 mins read
25c85e07-3505-4b6a-ab74-6d15e6c37a3a
2026ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்தியாவில் நக்சலிசத்திற்கு முடிவுகட்டப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். - கோப்புப்படம்: பிடிஐ

புதுடெல்லி: வன்முறையையும் ஆயுதங்களையும் கைவிட்டு மாவோயிஸ்ட்டுகள் சரணடைய வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியிருக்கிறார்.

வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் நக்சலிசத்திற்கு இந்தியாவில் முடிவுகட்டப்படும் என்று அவர் காலக்கெடு வகுத்துள்ளார்.

“நாட்டில் நக்சல் வன்முறையும் கருத்தியலும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார். 2026 மார்ச் 31ஆம் தேதியை அதற்குக் கடைசி நாளாகக் குறித்துவிட்டோம். அதற்கு முன்னதாகவே அதனைச் செய்துகாட்டுவோம்,” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்துள்ளதாகக் கூறிய அவர், இப்போது சத்தீஸ்கர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் மட்டுமே மாவோயிஸ்ட்டுகள் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

நேப்பாளத்தின் பசுபதிநாத்திலிருந்து ஆந்திராவின் திருப்பதிவரை தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த மாவோயிஸ்ட்டுகள் முயன்றதாகவும் ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு அதனை முறியடித்துவிட்டதாகவும் அமித்ஷா சொன்னார்.

சத்தீஸ்கர் மாநில அரசுடன் இணைந்து, அம்மாநிலத்தில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஒரு நலத்திட்டத்தை உள்துறை அமைச்சு விரைவில் வகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“வேலைவாய்ப்பு, சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட நல்வாழ்வு நடவடிக்கைகள் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்போம்,” என்றார் அவர்.

நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 55 பேருக்குமுன் உரையாற்றியபோது அவர் இவ்வாறு சொன்னார்.

இதனிடையே, மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

இவ்வாண்டில் மட்டும் 164 மாவோயிஸ்ட்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கொன்றுவிட்டனர். ஆண்டின் முற்பாதியில் சத்தீஸ்கரில் மட்டும் 142 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்