தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்காக அமித்ஷா மன்னிப்புக் கேட்கவேண்டும்’

2 mins read
2a053bf0-a642-41b8-8658-490c460a6e6a
திரு அமித்ஷாவின் கருத்துகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள். - படம்: பிடிஐ

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திரு பிஆர் அம்பேத்கரைப் பற்றிப் பேசினார்.

திரு அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்வது காங்கிரஸ் கட்சிக்கு வாடிக்கையாகிவிட்டது என்று திரு அமித்ஷா செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 17) நாடாளுமன்றத்தில் சாடினார்.

“அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர். கடவுளின் பெயரை அத்தனை முறை பயன்படுத்தியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்,” என்று திரு ‌ஷா காங்கிரசைத் தாக்கிப் பேசினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையப்பட்டு 75 ஆண்டு நிறைவு குறித்த இரண்டு நாள் நாடாளுமன்ற விவாதத்தின் இறுதியில் திரு ‌ஷா அவ்வாறு கூறினார்.

திரு அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் பயன்படுத்துவதில் தனது பாரதிய ஜனதா கட்சிக்குப் (பாஜக) பிரச்சினை ஏதும் இல்லை என்றும், அதேவேளை, திரு அம்பேத்கரைப் பற்றித் தாங்கள் கொண்டுள்ள உண்மையான கருத்துகளை பாஜக வெளிப்படுத்தவேண்டும் என்றும் திரு ‌ஷா எடுத்துரைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட அக்கட்சித் தலைவர்கள் பலர் திரு ‌ஷாவின் கருத்துகளுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மனு தர்மத்தில் (Manusmriti) நம்பிக்கை கொண்டிருப்போர் திரு அம்பேத்கரை எதிர்க்கத்தான் செய்வர் என்று திரு காந்தி எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.

திரு அம்பேத்கரைத் தாக்கிப் பேசியதன் மூலம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக மனு தர்மத்தை நடைமுறைப்படுத்துவதில்தான் என்றுமே அக்கறை காட்டியிருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது என்று திரு கார்கே சாடினார். அதைத்தான் திரு அம்பேத்கர் செய்யவிடவில்லை என்றும் திரு கார்கே குறிப்பிட்டார்.

திரு அம்பேத்கரை இழிவுபடுத்திவிட்டதாகவும் அதற்கு திரு ‌ஷா மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திரு ‌ஷாவின் கருத்தை காங்கிரஸ் திரித்துவிட்டது என்று பாஜக உறுப்பினரும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

“(திரு‌ ஷா பேசியதிலிருந்து) ஒரு பகுதி பதிவானக் காணொளி பலரால் பகிரப்பட்டது. அவர் கூறியது திரிக்கப்பட்டுவிட்டது. அது தவறு. நான் வன்மையாகக் கண்டிருக்கிறேன்,” என்று இந்திய நாடாளுமன்ற விவகார அமைச்சரும் சிறுபான்மை விவகார அமைச்சருமான திரு ரி‌ஜிஜு செய்தியாளர்களிடம் கூறினார் என்று பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்