அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

கோப்புப் படம்: ஏபிபி

17 Nov 2026 - 4:30 pm

2 mins read

புதுடெல்லி: இந்தி நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்குக் குண்டர் கும்பல் தலைவன் கோல்டி தில்லான் சமூக ஊடகம் மூலம் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக அமிதாப் பச்சன் பேசியதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குப் பதிலடியாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையிலுள்ள தனது ‘ஜல்சா’ இல்லத்திற்கு வெளியே, குண்டு துளைக்காத கண்ணாடித் தடுப்புகளுக்குப் பின்னால் நின்று அமிதாப் பச்சன் ரசிகர்களைச் சந்தித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள கோல்டி தில்லான், “குண்டு துளைக்காத அறைகளால் உங்களைக் காப்பாற்ற முடியாது. மும்பையில் இருவர் கைது செய்யப்பட்டாலும் எங்கள் திட்டம் நிற்கவில்லை. இருநூற்றுக்கும் மேற்பட்டோர் தயாராக உள்ளனர்,” என மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தப் பதிவில் லாரன்ஸ் பிஷ்னோய் பெயரைத் தவிர்த்து, ‘கோல்டி தில்லான் குழு’ எனக் குறிப்பிட்டிருப்பதன் மூலம், அவர் லாரன்ஸ் கும்பலிலிருந்து பிரிந்து தனித்துச் செயல்பட்டு வருவதாக மும்பை காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

ஏற்கெனவே கபில் சர்மாவின் உணவகத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வழக்குகளில் தேசியப் புலனாய்வு முகமையால் தேடப்பட்டு வரும் கோல்டி தில்லான், கடந்த ஜூலை மாதம் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தனது மிரட்டல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார்.

அண்மையில் நடிகர் டைகர் ஷெராஃப் தொடர்பான துப்பாக்கிச் சூடு சம்பவம், வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து, பாலிவுட் நட்சத்திரங்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்குமாறு மும்பை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனும் அமிதாப் பச்சனுக்கு மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போதைய புதிய மிரட்டலால் பச்சன் குடும்பத்தினரின் இல்லத்துக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு அம்சங்களைப் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்