புதுடெல்லி: இந்தியாவில் வருமான வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் முதல் இடத்தை பிடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தி, தமிழ் எனப் பல்வேறு மொழிகளில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன். மேலும், ஏராளமான விளம்பரங்களிலும் அவரைப் பார்க்க முடிகிறது.
இதன் மூலம் அவர் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார். கடந்த 2024-25 நிதியாண்டில் மட்டும் அமிதாப் பச்சன் வருமானம் ரூ.350 கோடியாக பதிவாகி உள்ளது.
இதில் ரூ.120 கோடியை அவர் வருமான வரியாக செலுத்தி உள்ளார். இதையடுத்து, நாட்டின் முன்னணி வரி செலுத்துபவராகத் திகழ்கிறார் அமிதாப் பச்சன். அவருக்குத் தற்போது 82 வயதாகிறது.
கடந்த ஆண்டு ரூ.92 கோடி வரி செலுத்தி ஷாருக்கான் முதலிடத்தில் இருந்தார். கடந்தாண்டு நான்காம் இடத்தில் இருந்த அமிதாப் பச்சன், தற்போது ரூ.120 கோடி வரி செலுத்தியதன் மூலம் ஷாருக்கானை விஞ்சி, முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.
மற்றொரு இந்தி நடிகரான சல்மான் கான் ரூ.75 கோடி வரி செலுத்தி உள்ளார்.