மும்பை: நாடு முழுதும் சனிக்கிழமை பிள்ளையார் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. குறிப்பாக இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரில் பிள்ளையார் சதுர்த்தி வெகு விமரிசையாக 10 நாள்களுக்குக் கொண்டாடப்படும்.
இதை முன்னிட்டு, மும்பை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிள்ளையார் சதுர்த்தியின்போது, மும்பையின் லால்பாக்சா ராஜா பிள்ளையார் கோவிலில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்வர்.
இந்நிலையில், பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு, லால்பாக்சா ராஜா பிள்ளையாருக்கு, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 கிலோ தங்கக் கிரீடத்தை, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி காணிக்கையாக வழங்கி உள்ளார்.
பத்து நாள்கள் கொண்டாடப்படும் பிள்ளையார் சதுர்த்தி விழாவையொட்டி மும்பையில் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2,500 பெரிய விநாயகர் சதுர்த்தி மண்டல்கள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று பந்தல் அமைத்து பிள்ளையாரை வழிபாடு செய்து வருகின்றனர்.
பரேல், கிர்காவ், அந்தேரி, செம்பூர் முதலிய பகுதிகளிலும் பிள்ளையார் சதுர்த்தி விழா பெரிய அளவில் களைகட்டிக் காணப்பட்டது.


