சென்னை: டாக்டர் அன்புமணி ராமதாஸை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதை ஏற்க முடியாது என்று அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா அறிவித்துள்ளார்.
பாமகவில் ஜனநாயகத்தை டாக்டர் ராமதாஸ் படுகொலை செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், டாக்டர் ராமதாஸ், தாமே தலைமைப் பொறுப்பேற்பதையும் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
பாமக தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸை அவரது தந்தையும் பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் திடீரென நீக்கினார். அன்புமணி ராமதாஸ், இனி பாமகவின் செயல் தலைவர் மட்டுமே; பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக தாமே செயல்படுவேன் என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 10) தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செயல்பாட்டு மாற்றங்களை மேற்கொள்வதாகக் கூறிய அவர், இதற்குப் பின்னால் சொல்ல முடியாத காரணங்களும் இருக்கின்றன என்றும் கூறினார்.
இதுவரைக்கும் அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் பிரச்சினை ஏற்பட்டபோதெல்லாம் பாமக நிர்வாகிகள் ஒரு நிலைப்பாடு எடுத்து அறிவித்ததில்லை. தற்போது பாமக பொருளாளர் திலகபாமா, பகிரங்கமாக ராமதாஸுக்கு எதிர்ப்பும் அன்புமணிக்கு ஆதரவும் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் மிகுந்ததாகிறது. அவரைத் தொடர்ந்து பாமக நிர்வாகிகள் பலரும் அன்புமணிக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் வீடு முன்பாக அன்புமணியின் ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த டிசம்பரில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணிக்கும், டாக்டர் ராமதாஸுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. இளைஞரணி தலைவராக தனது பேரன் முகுந்தனை நியமித்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால், அதை அன்புமணி எதிர்த்தார். அப்போது, ‘இது என் கட்சி… இங்கே நான் எடுப்பதுதான் முடிவு’ என்று மேடையிலேயே அறிவித்தார் ராமதாஸ்.
அதன் பிறகு அன்புமணி மேடையில் எழுந்து, ‘இனி என்னை சந்திக்க வருகிறவர்கள் பனையூரில் இல்லத்துக்கு வரலாம்’ என்று அறிவித்தார். அதன்பின் தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார் அன்புமணி.
தொடர்புடைய செய்திகள்
இந்த விவகாரத்தில் டாக்டர் அன்புமணி இதுவரை தனது கருத்தை வெளிப்படுத்தவில்லை.