பெலகாவி: வேலி அமைக்க குழி தோண்டியபோது 14 தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்தது. அந்தத் தங்க நாணயங்கள் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என நம்பப்படுகிறது.
இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், சவதத்தி வட்டத்தைச் சேர்ந்த இஞ்சலா என்னும் சிற்றூரில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணியின்போது தொழிலாளர்கள் சிலர் வேலி அமைக்க குழி தோண்டினர்.
அப்போது, அந்தக் குழியில் பழங்காலப் பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை வெளியில் எடுத்து தொழிலாளர்கள் சோதனை செய்தனர். அந்தப் பானைக்குள் தங்க புதையல் இருந்தது தெரியவந்தது. அதில் 14 தங்க நாணயங்கள் இருந்தன. அதனைப் பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக தங்களது மேற்பார்வையாளர்க்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தத் தங்க நாணயங்களை எடுத்துக்கொண்டு ஊராச்டி அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கிருந்த ஊராட்சி அலுவலரிடம் அந்தத் தங்க நாணயங்களை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புதையல் பானையில் இருந்த 14 தங்க நாணயங்களையும் பெற்று, தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்தார்.
அந்தத் தங்க நாணயங்களை ஆய்வுசெய்த தொல்லியல் துறையினர், “அவை 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். கங்கர் ஆட்சி அல்லது விஜய நகரப் பேரரசுக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நாணயங்களாக இருக்கலாம். ஆயினும், ஆய்வுக்குப் பிறகுதான் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவரும்,” என்று கூறினர்.
அந்த நாணயங்களின் மேல்புறத்தில் யானைப் படம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த யானைப் படம் கங்கர் ஆட்சி காலத்தில் அரசு சின்னமாக இருந்துள்ளது. ஆகையால், அந்த நாணயங்கள் அனைத்தும் கங்கர் ஆட்சி காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். அவை 800 முதல் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
கண்டெடுக்கப்பட்ட 14 தங்க நாணயங்களின் மொத்த எடை 54.8 கிராம் என்றும் அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.82 லட்சம் இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.


